×

மரக்கன்றுகளை நட முடியாவிட்டால் ஏன் மரங்களை வெட்ட வேண்டும்? : வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரக்கன்று நட வேண்டும் : நீதிபதிகள் உத்தரவு!!

மதுரை, : ‘நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டன?  மரக்கன்றுகளை நட முடியாவிட்டால் ஏன் மரங்களை வெட்ட வேண்டும்?’ என ஐகோர்ட் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஒரு மரம் வெட்டினால், 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என்றும், இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாநிலத்தின் தலைநகரத்தோடு முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இருந்த நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டன. சாலையின் தரத்தை மேம்படுத்தவும், பாரமரிக்கவும் போதிய நிதி இல்லாததால், தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் ஒப்பந்தம் செய்து தேசிய நெடுஞ்சாலைக்காண பணிகள் நடந்தன. இதற்காக ஆங்காங்கே சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது சாலைகளின் இருபுறமும் இருந்த சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் மரங்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டப்பட்டன. இதற்காக சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திருக்க வேண்டும். ஆனால் பெயரளவில் மரக்கன்றுகளை நட்டதோடு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் பணிகளை முடித்துக் கொண்டனர். வெட்டிய மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நடவில்லை.
இது தொடர்பான வழக்கில் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் மரக்கன்றுகள் நடப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2015ல், பசுமை நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ், சாலையோரங்களில் மரக்கன்று நடும் திட்டத்திற்காக ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், அதற்கான பணிகள் நடந்ததாக தெரியவில்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும் குறிப்பிட்ட காலத்திற்குள் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில், வனத்துறை மூலம் ஒப்பந்தம் செய்து மரக்கன்று நடும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘சுற்றுச்சூழல் மிகவும் பாதித்துள்ளது. பருவமழை தவறுகிறது. எந்த வகையான மரங்கள் மரங்கள் நடப்பட்டுள்ளன? உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்தின் போது ஒரு மரம் வெட்டப்பட்டால், ஈடாக 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால், மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? சென்னை-மதுரை இடையே சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு விசாரணையை நவ.5க்கு தள்ளி வைத்தனர்.


Tags : Judges , India, Corona, Former President, Pranab Mukherjee, Union Minister, MLAs, killed...
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...