×

‘சிறந்த உழைப்பாளரை இழந்து விட்டோம்’: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடிக்கு மோடி இரங்கல்; மத்திய அமைச்சரவையில் மவுன அஞ்சலி!!

புதுடெல்லி, :‘சிறந்த உழைப்பாளர், திறமையான அமைச்சரை இழந்து விட்டோம்’ என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கடியின் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  14ம் தேதி நாடாளுமன்ற கூட்டம் துவங்க இருந்த நிலையில் முன்னதாக கடந்த 11ம் தேதி அனைத்து எம்பிக்களும், அமைச்சர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் சுரேஷ் அங்கடிக்கு, கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், கவலைப்பட ஏதும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்து விட்டார் என்று, அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.கொரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்கடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கர்நாடகத்தை சேர்ந்த அவர், 4வது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டு, அமைச்சரவையில் இடம் பிடித்தவர்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டர் பதிவில், ‘சுரேஷ் அங்கடி சிறந்த உழைப்பாளர். கர்நாடாகவில் பாஜவை வளர்த்ததில் அவரது கடுமையான உழைப்பு உள்ளது. மிகத் திறமையான எம்பி மற்றும் அமைச்சரும் கூட. அவரது மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. என்னுடைய நினைவுகள் தற்போது அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களுடன் உள்ளது. ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கடியுடனான தனது புகைப்படத்தையும் மோடி பதிவு செய்துள்ளார்.

இதனிடையே மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி மறைவுக்கு மத்திய அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  Tags : Suresh Angadi ,Modi ,Union Cabinet ,Silent , Best Labor, Union Minister, Suresh Angadi, Modi, condolences
× RELATED நாங்குநேரியில் வறுமையால் தீக்குளித்த தொழிலாளி சாவு