9 ஆண்டா சாலை குண்டும், குழி: போராட்டத்தில் குதித்த திண்டுக்கல் அக்ரஹாரம் மக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டான கணபதி அக்ரஹாரம், ராஜீவ்காந்தி நகர் பகுதிகளில் கடந்த 9 ஆண்டுகளாக சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனை சீரமைத்து தர கோரி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரியும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து முன்னாள் திமுக கவுன்சிலர் ஜானகிராமன் கூறுகையில், ‘இச்சாலையின் நடுவே கழிவுநீர் செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் முழுமையாக சிதிலமடைந்து கம்பிகள் வெளியே நீட்டி கொண்டிருக்கின்றன.

இக்கம்பிகளால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகுவதுடன், நடந்து செல்வோரும் தட்டி கீழே விழுந்து வருகின்றனர். வரி வசூலில் வேகமாக செயல்படும் மாநகராட்சி இச்சாலையை சீரமைக்க மட்டும் ஏன் இதுவரை முன்வரவில்லை. தேர்தல் வந்தால் இச்சாலையில் மண்ணை மட்டும் மேலே போட்டு விட்டு செல்கின்றனர். அதுவும் அடுத்த மழைக்கு காலியாகி விடுகிறது.இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனை, திருமண மண்டபங்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனே இச்சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>