×

ரயில்வே பார்சல் சேவையிலும் முன்பதிவு முறை அறிமுகம்!: வர்த்தக சங்கங்களில் வேண்டுகோளை ஏற்றது தெற்கு ரயில்வே..!!

சென்னை: ரயில் பயணசீட்டு முன்பதிவு செய்வதை போல ரயில்வே பார்சல் சேவையிலும் முன்பதிவு முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. பார்சல் சேவையில் முன்பதிவு முறை அமல்படுத்த வேண்டும் என வர்த்தக சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது. அதன்படி பயணிகள் ரயில்களில் இயக்கப்படும் பார்சல் வேன்களில் வர்த்தகர்கள் தாங்கள் வைத்திருக்கும் பொருட்களின் எடைக்கு ஏற்ப இடத்தை 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம், வா்த்தகா்கள் தங்களின் சரக்குகளை அனுப்புவதை திட்டமிட்டு கொள்ளமுடியும். மேலும் ரயிலில் அனுப்புவதையும் உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் ஒப்பந்த குத்தகை அடிப்படையில் இருக்கும் பார்சல் வேன்களில் முன்பதிவு செய்ய முடியாது என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து, முன்பதிவை ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்தால், 50 சதவீத முன் வைப்பு கட்டணம் திருப்பி தரப்படும். தவறினால் முழு முன்வைப்பு கட்டணமும் காலாவதியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சல்களை முன்பதிவு செய்ய விரும்புவோர் தங்களுக்கு அருகிலிருக்கும் ரயில் நிலையத்தில் பார்சல் பிரிவு மேற்பார்வையாளரையோ அல்லது ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இருக்கும் வர்த்தக பிரிவையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பார்சல் சேவை பற்றி அறிய கட்டணமில்லா தொலைபேசி எண் 139ஐ தொடர்பு கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த முன்பதிவு வசதி பார்சல் வேன்களை முறையான பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், மேலும் தேவை அதிகமுள்ள பகுதிகளுக்கு பார்சல் வேன் இயக்குவதை அதிகப்படுத்தவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Introduction ,Southern Railway , Railway Parcel Service, Booking, Southern Railway
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...