×

தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு மாடுகள்

மஞ்சூர்: மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. சமீபகாலமாக இப்பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகள் அதிகளவில் நடமாடி வருகின்றன.

நேற்று காலை மஞ்சூர் பிக்கட்டி சாலையில் உள்ள தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் சிலர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு மாடுகள் கூட்டம் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மேய்ச்சலில் ஈடுபட்டது. இதில் இருந்த 2 மாடுகள் திடீரென தொழிலாளர்கள் இருந்த இடத்தை நோக்கி சென்றுள்ளன. இதை கண்டு பீதி அடைந்த தொழிலாளர்கள் தேயிலை பறிப்பதை பாதியில் நிறுத்தி தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள்.

இதைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகே காட்டு மாடுகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன. மஞ்சூர் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பல வகையிலான மலை காய்கறிகளை பயிரிட்டு வருகிறார்கள். விளை நிலங்களில் காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக புகுந்து பயிர்களை சூறையாடுவதுடன் தோட்டங்களையும் கால்களால் மிதித்து நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. காட்டு மாடுகளின் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலர் மலைகாய்கறி விவசாயம் மேற்கொள்வதை விட்டுவிட்டனர். எனவே காட்டு மாடுகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விடுத்துள்ளார்கள்.

Tags : tea garden , Tea, wild cows
× RELATED பந்தலூர் அருகே பிடிக்கப்பட்ட சிறுத்தை வண்டலூர் கொண்டு செல்லப்பட்டது