அந்நிய செலாவணி ஈட்டித்தரும் ஆம்பூரில் 5 ஆண்டுகளாக கிடப்பில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்த ஆம்பூர் நகரம் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தின் கீழ் உள்ளது. பாலாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் பழங்காலத்தில் காட்டாம்பூர் என்று இருந்ததாகவும் இது மருவி பின்னர் கடாம்பூர் எனவும், பின்னர் ஆம்பூர் என திரிந்ததாக வரலாறு உண்டு. பண்டைகாலத்தில் ஆமூர்கோட்டமென திகழ்ந்ததால் ஆம்பூர் எனவும் அழைக்கப்பட்டதாக கூறுவர்.

கடல் மட்டத்தில் இருந்து 316 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆம்பூரில் ஒரு 1.13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஆண்கள் 56 ஆயிரம் பேரும், பெண்கள் 57,800 பேரும் அடங்குவர். இப்பகுதி மக்களின் கல்வியறிவு 86.83 சதவீதம் ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 45.80 சதவீதம், முஸ்லீம்கள் 50.10சதவீதம், கிறிஸ்தவர்கள் 3.83 சதவீதம் என்று 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு தெரிவிக்கிறது.

சென்னை-பெங்களூர் இடையேயான என்.எச் 46 எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே சம தூரத்தில் அமைந்துள்ள நகரமாக ஆம்பூர் திகழ்கிறது. தமிழகத்தின் முக்கிய தோல் நகரமான ஆம்பூர் அன்னிய செலாவணியை அதிக அளவில் இந்திய நாட்டிற்கு ஈட்டி தரும் தொழில் நகரங்களில் ஒன்றாக உள்ளது. தோல் பதனிடுதல், தோல் பொருட்கள், ஷூ ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவங்கள் வாயிலாக ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணியை ஈட்டி தரும் ஆம்பூர் தேர்வு நிலை நகராட்சியாக விளங்குகிறது.

சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இந்த நகராட்சியில் நகராட்சி தலைவர் பதவிக்கு ஒரு முறை இந்துவும், மறுமுறை சிறுபான்மையினரும் பதவி வகித்து வருவது பின்பற்றி வருவதே சான்றாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புகள் இருந்தாலும் ஆம்பூருக்கான தேவைகள் பூர்த்தியடையாமல்் உள்ளது. ஆம்பூர் ரெட்டிதோப்பு, நியூ பெத்லகேம், மிஷன் காம்பவுண்ட், கே.எம். சாமி நகர், கம்பிகொல்லை, நாய்க்கனேரி மலைகிராமம், நதிசீலாபுரம், ஆகிய பகுதிகளில் மழை காலங்களில் கழிவுநீர் தேங்குவதால் போக்குவரத்து தடை ஏற்பட்டு தீவு போல ஆகி விடுகிறது.

தொழில் நகரமான ஆம்பூரில் செயல்பட்டு வந்த செயற் பொறியாளர் அலுவலகம் பள்ளிகொண்டாவிற்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு செயல்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகொண்டா வேலூர் மாவட்டத்தில் உள்ளதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ள ஆம்பூரில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். ஆம்பூர் அடுத்த மின்னூரில் இயங்கிய தோல் பதனிடும் ஆலை மூடப்பட்டு 25 ஆண்டுகளான நிலையில் அங்கு மேற்கொண்டு தொழிற்சாலை அமைக்கவோ அல்லது இதர மேம்பாட்டு பணிகளோ மேற்கொள்ளப்பட வில்லை என்பது அப்பகுதியினரின் குற்றசாட்டாக உள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தின் தொழில் தலைநகரான ஆம்பூரில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் ஏற்படுத்தி தரவும், தொழிலாளர் நல அலுவலகம் அமைத்து தரவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதில் கோட்டாட்சியர் அலுவலகமும் அடக்கம்.

ஆம்பூர் அருகே இயங்கி வரும் சிட்கோ தொழிற்பேட்டையை விரிவு படுத்தி தொழில் நிறுவனங்களுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆம்பூர் வன சரகத்தில் பல்லுயிர் சரணாலயம் அமைக்க வேண்டும். நாய்க்கனேரி மலைப்பகுதியில் செம்மர புரோக்கர்கள் பிடியில் சிக்கிய மக்களுக்கு படகு குழாம் அமைத்து வாழ்வாதாரம் காக்க வேண்டும். ஆம்பூரில் வனப்பகுதி வழியாக இருந்த மிலிட்டரி சாலை உள்ளிட்ட சாலைகளை மீண்டும் ஏற்படுத்தினால் ஆந்திரா, கர்நாடகத்திற்கு செல்ல எளிதாக இருக்கும். பூங்கா, விளையாட்டு மைதானம் ஆகிய கோரிக்கைகள் எட்டாக் கனியாக உள்ளது.அரசு மருத்துவமனையில் துறை சார்ந்த டாக்டர்கள் இல்லை. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள நகரம் என்பதால் இங்குள்ள மருத்துவமனை பிணவறை குளிரூட்டப்பட்டதாக அமைக்கவும் கோரிக்கை உள்ளது. ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியில் செயல்பட்டுவரும் மத்திய தொழிலாளர் மருந்தகத்தை (இஎஸ்ஐ) நவீனப்படுத்த வேண்டும். அதிக வருவாய் ஈட்டி தரும் ஆம்பூர் ரயில் நிலையத்தில் நடை மேடை அமைத்து, நகரும் படிக்கட்டுகள் அமைத்து தரவும், வடநாட்டிற்கு செல்லும் ரயில்களை ஆம்பூரில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பூர் அருகே உள்ள தென்னம்பட்டில் சமண முனிவர்கள் தங்கி இருந்த ஆர்மா குகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஆம்பூர் அடுத்த ஊட்டல் வனப்பகுதியில் தேவஸ்தானம் உள்ளது. அங்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளாக வற்றாத ஊற்று உள்ளது.

நாகதோஷபரிகார தலமான ஆம்பூர் சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயில் உள்ளது.

சனீஸ்வரனின் ஆணவத்தை அழித்து அவரை காலால் மிதித்தபடி அருளும் பெரிய ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.

பிரதூர்த்தன் என்னும் அரங்கனை அழித்ததால் உருவான துத்திபட்டு பிந்து மாதவ பெருமாள் கோயில் உள்ளது.

ஆம்பூரில் முஹம்மத் புராமசூதி, பெரிய மசூதி, ரெட்டிதோப்பு லுத்தர தேவாலயம் ஆகியவை பிரசித்தி பெற்றவை.

எம்ஜி ஆர் , சிவாஜி உள்ளிட்ட பல்வேறு திரைத்துறையினருக்கு 1500 படங்களூக்கு மேல் ஆடை வடிவமைத்து தந்தவர் ஆம்பூர் அடுத்த பள்ளிதெருவை சேர்ந்த எம் ஜி நாயுடு

Related Stories:

>