×

குமாரபாளையம் கோம்புபள்ளம் ஓடையில் மூட்டை கட்டி வீசிய கொரோனா மருத்துவ கழிவுகள்

குமாரபாளையம்: குமாரபாளையம் கோம்புபள்ளம் ஓடையில் மூட்டை கட்டி வீசப்பட்ட கொரோனா மருத்துவ கழிவுகளை, தெரு நாய்கள் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் கோம்பு பள்ளம் ஓடை செல்கிறது. நேற்று இந்த ஓடையில் கொரோனா பாதுகாப்பு உடை, கையுறைகள், முககவசம், பயன்படுத்திய ஊசிகள் போன்ற கழிவுகளை மூட்டையாக கட்டி கொட்டியிருந்தனர். ஓடையில் இறங்கிய தெரு நாய்கள், இந்த மூட்டையை கடித்து கிழித்து, உள்ளே இருந்த முககவசம், கொரோனா பாதுகாப்பு உடை, கையுறைகளை கவ்விக்கொண்டு நாலாப்புறமும் சுற்றித்திரிந்தன. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள், கொரோனா கழிவுகளை கொட்டியது குறித்து, குமாரபாளையம் அரசு மருத்துவர் பாரதி, நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு மற்றும் இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி சுகாதார அதிகாரி ராமமூர்த்தி மற்றும் தூய்மை பணியாளர்கள், தெரு நாய்கள் தூக்கிச்சென்று வீதிகளில் போட்ட கொரோனா கழிவுகள், பள்ளத்தில் சிதறிக்கிடந்த கழிவுகளை மீட்டு, ஈரோடு நகராட்சியில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற செயலில் ஈடுபட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நகர திமுக பொறுப்பாளர் செல்வம், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

Tags : Corona ,stream ,Kumarapalayam Kombupallam , Kumarapalayam, Corona, Medical Waste
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...