×

பெட்ரோல், டீசல் தேவையில்லை: பெடலை சுற்றினாலே ஓடும் பேட்டரி கார் கண்டுபிடிப்பு

திருமங்கலம்: திருமங்கலத்தை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வடிவமைத்த, பெடலிங் பேட்டரி கார் அனைவரையும் கவர்ந்துள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டி. திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். இவரது மகன் சிவபாண்டி (21) மதுரையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

சிவபாண்டிக்கு சிறுவயது முதலே எந்த துறையிலாவது சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதற்காக ஆட்டோமொபைல் பிரிவை விரும்பி தேர்ந்தெடுத்து, தனது நண்பர்களான அஜித், முகமது காதர் மற்றும் சுந்தரபாண்டியுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான புதிய வகை பெடலிங் காரை (பேட்டரி கார்) தயாரித்துள்ளார். சைக்கிள் போல் பெடலை சுற்றினால் அதன்மூலமாக மின்சாரம் கிடைத்து காரில் பொருத்தியுள்ள சிறிய ரக பேட்டரி மூலமாக கார் ஓடத்துவங்குகிறது. 400 கிலோ எடை வரை காரில் ஏற்றும் வகையில் இதனை வடிவமைத்துள்ளார். இவர் இந்த காரை நேற்று அறிமுகப்படுத்தினார்.

மாணவர் சிவபாண்டி கூறுகையில், ‘‘டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களின் முக்கிய பிரச்னையே காற்று மாசுபடுதல் தான். வாகனங்களிலிருந்து அதிகளவில் வெளியேறும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது சுற்றுசூழல் மாசுடைகிறது. இதனால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. அரசாங்கமே தற்போது பேட்டரி வாகனங்களை இயக்க அறிவுறுத்தி வருகிறது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த பெடலிங் வகையிலான காரை கண்டுபிடித்துள்ளேன்.

மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லலாம். பிரேக், கியர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சாதாரண காரில் இருப்பது போல்தான் உள்ளது. இதனை தயாரித்து இயக்க எனக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே செலவானது. தற்போது நான் மற்றும் எனது குடும்பத்தினர் இந்த காரில் தான் பயணம் செய்கிறோம். முழு சார்ஜிங் பேட்டரி இருக்கும்போது 37 கிமீ வரையில் தொடர்ந்து செல்ல முடியும். பெட்ரோல், டீசல் செலவு கிடையாது. பேட்டரி சார்ஜிங் செய்யும் முறையும் உள்ளது. பெடலிங் செய்து காலால் சுற்றினால், உந்து சக்தியால் பேட்டரியில் மின்சாரம் சேமிக்கும் வசதியும் உள்ளது’’ என்றார்.

Tags : Battery car, invention
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...