×

மழை பாதிப்பு காரணமாக பாவூர்சத்திரம் பகுதியில் 7 ஆயிரம் ஏக்கரில் பல்லாரி பயிர் அழுகல்

நெல்லை: பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாரி பயிர் அழுகி வருவதால் வெங்காயம் திடீர் விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. மழை பாதிப்பு காரணமாக கேரளாவுக்கு வெங்காயம் செல்வதும் தடைபட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் அதிகளவில் பல்லாரி சாகுபடி நடந்து வருகிறது. அதிலும் கேரள சந்தையின் கேந்திரமான பாவூர்சத்திம் சுற்றுவட்டாரங்களில் பல்லாரி சாகுபடி அதிகம். பாவூர்சத்திரத்தை சுற்றிலும் நாகல்குளம், பெத்தநாடார்பட்டி, கீழப்பாவூர், கழுநீர்குளம், மேலபட்டமுடையார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பல்லாரி சாகுபடி நடந்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் கடந்த 10 நாட்களாக விடாமல் பெய்து வரும் சாரல் மழை காரணமாக பல்லாரி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த வாரம் ஒருநாள் தொடர்ச்சியாக பெய்த மழையில் பாவூர்சத்திரம் வட்டாரத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் பல்லாரி பயிர்கள் அழுகின. இதனால் வயல்களில் பறித்த பல்லாரியை விற்க முடியாத சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

மழை பாதிப்பு காரணமாக பல்லாரி பயிரில் நோய் தாக்குதலும் காணப்பட்டது. விவசாயிகள் அதற்குரிய மருந்துகளை வாங்கி தெளித்தும், பயிரின் பாதிப்பு குறையவில்லை. இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்லாரி விலை இயல்பாகவே உயர தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ரூ.10 கூடுதல் விலை பல்லாரிக்கு நிர்ணயிக்கப்படுகிறது. நெல்லை உழவர் சந்தைகளில் நேற்றைய பல்லாரி விலை ரூ.48ஐ தொட்டது. பல்லாரி அழுகல் காரணமாக கேரளாவுக்கு செல்வதும் தடைப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாவூர்சத்திரம் விவசாயி மாரியப்பன் கூறுகையில், ‘‘பல்லாரி சாகுபடியில் தற்போது உரிய லாபத்தை பெற முடியவில்லை. பருவமழை தொடங்கிய பின்னரே பல்லாரி சாகுபடியில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் இவ்வாண்டு அதற்கு முன்பே பெய்த மழையால் பல்லாரி அழுகி வருகிறது. குறுணி சாகுபடிக்கு எங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் அத்தொகையை எடுத்தாலே போதும் என நினைக்கிறோம். இப்போது எங்களிடம் இருந்து ஒரு கிலோ பல்லாரி ரூ.30க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அழுகல் காரணமாக பல்லாரியை போதிய அளவு சப்ளை செய்ய முடியவில்லை.

பல்லாரி விதைக்காக ஒரு கிலோ ரூ.850 செலவு செய்கிறோம். செல், புழுக்கள் அரிக்காமல் இருக்கவும், நன்கு தளிர்க்கவும் 4 முறை மருந்து அடிக்க வேண்டியதுள்ளது. 15 தினங்களுக்கு ஒருமுறை இரு உரங்கள் இட வேண்டியதுள்ளது. இவ்வளவு செலவுக்கும் ஏற்ற விலை மார்க்கெட்டில் இருப்பதில்லை.’’ என்றார். நெல்லை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ளி, பல்லாரி திடீர் விலையேற்றம் காரணமாக பொதுமக்களும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வெளிமார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ பல்லாரி ரூ.55க்கும், ஒரு கிலோ உள்ளி ரூ.70க்கும் விற்கப்பட்டு வருகிறது.

Tags : area ,Pavoorchatram , Pavoorchatram, onion, rain
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...