×

கொரோனா அச்சத்தால் பயணிகளின்றி வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்ட்

சேலம்: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் கொரோனா தாக்கம் குறையவில்லை. கொரோனா அச்சத்தால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ஜூன் மாதத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் பஸ்கள் இயக்கப்படுவதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஜூன் 30ம் தேதி பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்தியாவில் கர்நாடகா, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் கடந்த ஜூலையில் இருந்து பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மற்ற நகரங்களை போலவே தமிழகத்திலும் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். இதை பரிசீலித்த அரசு கடந்த 1ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயங்கியது. பின்னர் 7ம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 60 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சத்தால் பயணிகள் கூட்டம் எதிர்பார்த்த அளவில் இல்லை. இதனால் பயணிகள் வருகைக்காக பஸ்கள் பல மணிநேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் சேலம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளின் கூட்டத்தைவிட, பஸ்களின் எண்ணிக்கையே அதிகளவில் காணப்படுகிறது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த டிரைவர்கள் கூறியதாவது: கொரோனாவுக்கு முன்பு அனைத்து அரசு பஸ்களிலும் 75 சதவீத பயணிகள் கூட்டம் இருந்தது. தனியார் பஸ்களில் 125 சதவீதம் கூட்டம் இருந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு அச்சம் காரணமாக வழக்கமாக பஸ்சில் பயணம் செய்ய பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் இல்லாததால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. காலை 7.30 மணியில் இருந்து 9.30 மணி வரையிலும், அதேபோல் மாலை 4 மணியில் இருந்து 5.30 மணிவரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கூட்டம், அலுவலக பணிக்கு செல்வோர் கூட்டம், வேறு பணிகளுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் காணப்படும். பள்ளிகள், கல்லூரிகள் இயங்காததால் 20 முதல் 30 சதவீத பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. தற்போது பஸ்சில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர், வாகனங்கள் இல்லாதவர்களாக உள்ளனர். அதேபோல் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் கூட கொரோனா அச்சத்தால் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அடிக்கடி உறவினர்களை பார்க்க பயணம் செய்வோரின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு சில வழித்தடங்களில் அரசு பஸ்களில் ஒற்றை இலக்கத்தில் பயணிகளை வைத்து பஸ்களை இயங்கி வருகிறோம். டீசலுக்கு கூட கட்டுப்படியாகாது. கொரோனா எண்ணிக்கை குறைய வேண்டும். அப்போது தான், பஸ்களுக்கு பழையபடி கூட்டம் வரும். அதுவரை பஸ்களில் நூறு சதவீத கூட்டத்தை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு டிரைவர்கள் கூறினர்.

Tags : Corona ,passengers , Corona, Bus Stand
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...