×

பழுதாகி நின்ற லாரியில் இருந்து கரும்புத்துண்டுகளை பறித்து தின்று ருசித்த யானைகள்

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியில் இருந்து கரும்புத்துண்டுகளை யானைகள் தும்பிக்கையால் பறித்து தின்று ருசித்தன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக பயணிப்பது வழக்கம். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் வந்து செல்கின்றன.

நேற்று அதிகாலை 3 மணியளவில் மைசூரிலிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கரும்பு லாரி பழுதாகி நின்றது. இதையடுத்து லாரி டிரைவர் லாரியை பழுது நீக்குவதற்காக மெக்கானிக்கை அழைத்து வர சென்றுவிட்டார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் திம்பம் மலைப்பாதையில் நின்றிருந்த கரும்பு லாரியை நோக்கி படையெடுத்தன.

அங்கு சென்ற யானைகள் கரும்புகளை தனது தும்பிக்கையால் தின்பதற்காக லாரியைச் சுற்றி சுற்றி வந்ததோடு, கரும்புத்துண்டுகளை பறித்து தின்று ருசித்தன. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்தனர். யானைகள் கரும்பு லாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Elephants, Satyamangalam
× RELATED ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை...