×

அரியலூர், திருவாரூர், தருமபுரி உள்பட 6 மாவட்டங்களில் ஆகஸ்டில் 15 ஆயிரத்துக்கும் குறைவான பரிசோதனை: தினசரி பரிசோதனை அளவு அதிரடியாக குறைந்தது

சென்னை: தமிழகத்தில் தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22ம் தேதி வரை தமிழகத்தில் 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 337 பேர் குமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 8947 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சோதனை அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இதன்படி தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனை செய்வதாக அரசு கூறிவருகிறது. அதாவது தமிழகத்தில் தினசரி 80 ஆயிரம் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. செப். 22ம் தேதி வரை தமிழகத்தில் 66 லட்சத்து 40 ஆயிரத்து 58  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் கொரோனா பரிசோதனையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவருகின்றனர். குறிப்பாக தினசரி மாவட்டம் வாரியாக கொரோனா சோதனை தொடர்பான எண்ணிக்கை வெளியிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசு இந்த விவரங்களை வெளியிடாமல் உள்ளது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் 19 மற்றும் 20ம் தேதி மாவட்டம் வாரியாக கொரோனா சோதனை எண்ணிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.  
இந்நிலையில் கொரோனா சோதனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 15 ஆயிரத்திற்கும் குறைவான பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் மிகவும் குறைவான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10, 538 பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தினசரி 339 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தருமபுரியில் மொத்தம் 11,260 பரிசோதனைகளும், தினசரி 363 பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 11,478 பரிசோதனைகளும், தினசரி 370 பரிசோதனைகள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் மொத்தம் 12,035 பரிசோதனைகளும், தினசரி 388 பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. கரூரில் மொத்தம் 12,753 பரிசோதனைகளும், தினசரி 411 பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. ஆறாவது மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 13,474 பரிசோதனைகளும், தினசரி 434 பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 4 மாவட்டங்களில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பரிசோதனைகளும், 4 மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பரிசோதனைகளும், 7 மாவட்டங்களில் 40 முதல் 50 ஆயிரம் பரிசோதனைகளும், 4 மாவட்டங்களில் 50 முதல் 60 ஆயிரம் பரிசோதனைகளும், 2 மாவட்டங்களில் 60 முதல் 70 ஆயிரம் பரிசோதனைகளும், ஒரு மாவட்டத்தில் 70 முதல் 80 ஆயிரம் பரிசோதனைகளும், ஒரு மாவட்டத்தில் 80 முதல் 90 ஆயிரம் பரிசோதனைகளும், 4 மாவட்டங்களில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் சோதனைகளும், ஒரு மாவட்டத்தில் 3 லட்சம் சோதனைகளும் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஏன் குறைக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

Tags : inspections ,districts ,Thiruvarur ,Dharmapuri ,Ariyalur , Less than 15 thousand tests in 6 districts including Ariyalur, Thiruvarur, Dharmapuri in August: Daily test volume drastically reduced
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...