×

தமிழக அரசு மறைமுக உத்தரவு எதிரொலி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை திடீர் நிறுத்தம்: 6 மாதமாக சிறு துரும்பைக் கூட நகர்த்தாத போலீசார்; 50 குற்றவாளிகள் அரசு பணியில் தொடர்ந்து நீடிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கை கடந்த 6 மாதமாக போலீசார் கிடப்பில் போட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் 50 குற்றவாளிகள் தொடர்ந்து பணியில் நீடிப்பதால், அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. அவர்கள் குற்றவாளிகளாக இருந்துகொண்டு உத்தரவிடும் பணியில் இருப்பதால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. மேலும் 50 நேர்மையானவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநிலம் முழுவதும் அரசு காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 பிரிவில் 9,398 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

அதில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சென்டரில் இருந்து தேர்வு எழுதிய அனைவரும் தேர்வு பெற்றது தெரியவந்தது. அதோடு விஏஓ, குரூப் 2 ஆகிய தேர்வுகளிலும் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் பணியாற்றுகிறவர்கள் உடந்தையுடன், முன்னாள் டிஜிபி ஒருவரின் டிரைவர் மற்றும் எஸ்.ஐ.க்கள், புரோக்கர்கள் உதவியுடன் பெரிய அளவில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக ராமநாதபுரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சென்டரில் பணியாற்றுகிறவர்கள், அழியும் மை மூலம் தேர்வு எழுதியதும், பின்னர் விடைத்தாள்கள் எடுத்துச் செல்லும் வேனை மறித்து, குறிப்பிட்ட விடைத்தாள்களை தனியாக எடுத்து அதில் அங்கு வைத்து நிரப்பியுள்ளனர். பின்னர் மீண்டும் அதே வேனில் விடைத்தாள்களை அனுப்பி வைத்துள்ளனர் என்று தெரியவந்தது. இந்த முறைகேட்டில் மேல் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், தேர்வில் வெற்றி பெற்ற பலர் தற்போது உள்துறை மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதும், கிராமங்களில் விஏஓக்களாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குரூப் 2 மற்றும் விஏஓ, குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட புரோக்கர்கள் உள்பட 40 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் 50 பேரை போலீசார் தேடி வந்தனர். ஆனால், கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு குறித்த எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. 50 பேரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிசிஐடி போலீசாரின் திடீர் மவுனம் குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் சிபிசிஐடி போலீசார் வேகமாகவும், திறமையாகவும் பணியாற்றி வந்தனர். ஆனால், வழக்கில் பல அதிகாரிகளின் டிரைவர்கள், டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் தொடர்பு என்று செய்திகள் வெளி வந்ததும், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது இந்த முறைகேடும் வெளியானது மக்கள் மத்தியில் கடும் கெட்ட பெயரை ஆளும் கட்சிக்கு ஏற்படுத்தியது. இதனால், அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் உத்தரவின்பேரில், இந்த வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். 50 பேரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் தற்போது பணியாற்றி வருகின்றனர். அதில் பலர் உள்துறை அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர்.

சிபிசிஐடி ஆவணத்தில் தேடப்பட்டு வருகிறவர்களாக இருப்பவர்கள், உள்துறை அலுவலகத்தில் அமர்ந்து போலீசாருக்கு உத்தரவு போடும் நிலையில் உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் போடும் உத்தரவு சட்டப்படி செல்லாது. ஆனால் அதிகார வர்க்கத்தின் உத்தரவால், குற்றவாளிகள் போடும் உத்தரவுகள் செல்லுபடியாகும் நிலைதான் தற்போது உள்ளது. அதேநேரத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர். இதனால் அரசுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.16 லட்சம் வரை வீணாக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது பணியில் இருக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறையாக வெற்றி பெற்று சீனியாரிட்டியில் உள்ள 50 பேருக்கு வேலை கிடைக்கும்.

அதேநேரத்தில் தற்போது 40 பேருக்கு மேல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சிபிசிஐடியில் இருந்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதுகுறித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிஎன்பிஎஸ்சி விதிமுறையைப் பொறுத்தவரை அந்தந்த ஆண்டுக்குள் தேர்வுகளை முடிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு விடும். இதனால், மீண்டும் தேர்வு நடத்தித்தான் அந்த காலியிடங்களை நிரப்ப முடியும்.

இப்போது நடவடிக்கை எடுத்தால், இந்த முறைகேடு மூலம் வந்தவர்களால், சீனியாரிட்டியில் இருந்தும் பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். இல்லாவிட்டால் அந்த நேர்மையானவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் சூழ்நிலை உருவாகிவிடும். இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், இந்த வழக்கில் கடந்த 6 மாதமாக சிபிசிஐடி போலீசார், உயர்மட்ட அழுத்தம் காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கை கட்டி நிற்கின்றனர் என்கின்றனர் நேர்மையான போலீஸ் அதிகாரிகள்.

* சிபிசிஐடி அதிகாரிகள் திணறல்
விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உத்திரமேரூர் விஏஓ வசந்தகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிமன்றம், விசாரணை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது. எவ்வளவு பேர் தலைமறைவாக உள்ளனர், அவர்களை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டனர். அந்த கேள்விளுக்கு முறையாக பதில் அளிக்க முடியாமல் சிபிசிஐடி அதிகாரிகள் திணறினர். இதனால், நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் பதிவு செய்தது. ஆனாலும், மேலிட உத்தரவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

Tags : government ,Tamil Nadu ,DNPSC ,offenders , Tamil Nadu government indirect order echoes DNPSC exam fraud case 50 offenders continue in government service
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து