×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றம் பாதியிலேயே முடிந்தது: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: கடந்த 14ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நேற்று மறுதேதி குறிப்பிடப்படாமல்  ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி முடிய வேண்டிய கூட்டத் தொடர், 8 நாட்களுக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 6 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த 14ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக, பாதுகாப்பு கருதி எம்பிக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தொற்று இல்லாத எம்பி.க்கள் மட்டுமே கூட்டத் தொடரில் பங்கேற்றனர்.

எம்பி.க்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எம்பி.க்கள் அமர்வதற்கும், அவை நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல்வேறு புதிய மசோதாக்கள், திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதா சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவையில் இந்த மசோதா பல்வேறு அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதேபோல், மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட போதிலும், குரல் வாக்கெடுப்பு மூலமாக 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் 8 பேர், கடந்த திங்களன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை அலுவல்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யும் வரையில் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தன. இந்நிலையில், அவை நடவடிக்கையில் கலந்து கொண்ட பல எம்பி.க்கள், அமைச்சர்கள் நிதின் கட்கரி உள்ளிட்டோருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி, நாடாளுமன்ற கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, பரபரப்பான சூழலில் நேற்று காலை நாடாளுமன்றம் கூடியது.

அப்போது, எதிர்க்கட்சி எம்பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியாக போராட்டம் நடத்தினார்கள். வேளாண் மசோதாவை நிறைவேற்றப்பட்டதை கண்டித்து நடந்த இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள் கலந்து கொண்டனர். இவர்கள், “விவசாயிகளை பாதுகாப்போம், தொழிலாளர்களை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்து அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, மகாத்மா காந்தி சிலையில் இருந்து அம்பேத்கர் சிலை வரை பேரணியாக சென்றனர்.

அதே நேரம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலேயே மாநிலங்களவையில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், அவை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், “மழைக்கால கூட்டத் தொடரில் 18 அமர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், 10 அமர்வுகள் மட்டுமே நடைபெற்றது. இந்த 10 நாட்கள் நடந்த கூட்டத் தொடரில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.” என்றார். பின்னர், மறுதேதி குறிப்பிடப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதனால், அக்டோபர் 1ம் தேதி வரையில் நடத்தப்பட இருந்த கூட்டத் தொடர், 8 நாட்களுக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. மாநிலங்களவை நேற்று மதியத்துடன் முடிக்கப்பட்ட நிலையில், மக்களவை மட்டும் மதியத்துக்கு மேல் கூடியது. இரவு வரை நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மக்களவையையும் மறுதேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

முதல் முறையல்ல
மாநிலங்களவையை ஒத்திவைப்பதற்கு முன்பாக பேசிய அவை தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘கடந்த இரண்டு அமர்வுகளில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு, 2 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்டுக்காக போராட்டம் போன்ற சூழலில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்று உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது, சில கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்வது போன்றவை அரங்கேறுவது முதல் முறையல்ல. ஆனால், இதுபோன்றவற்றை நான் விரும்பத்தகாதவையாக கருதுகிறேன். இதுபோன்ற சூழ்நிலையானது எப்போதும் தவிர்க்கப்பட வேண்டும். சில உறுப்பினர்களின் நடத்தைகள் கவலை தருவதாக உள்ளது. இது மிகவும் வேதனையானது,’’ என்றார்.

11 எம்பி.க்கள் பதவிக்காலம் முடிவு
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களை சேர்ந்த மாநிலங்களவை எம்பி.க்கள் 11 பேரின் பதவிக்காலம் வரும் நவம்பரில் முடிகிறது. ஓய்வு பெற உள்ள 11 எம்பி.க்களின் பெயர்களை அவை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்து, அவர்களின் சேவை தொடர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி (பாஜ), ராம் கோபால் யாதவ், ஜாவீத் அலிகான் (சமாஜ்வாடி),  வீர் சிங் , ராஜாராம் (பகுஜன் சமாஜ்), ராஜ் பாப்பர் மற்றும் பிஎல் புனியா (காங்கிரஸ்), நீரஜ் ஷேக்ஹர் (பாஜ), அருண் சிங்,  ரவி பிரகாஷ் வர்மா, சந்திரபால் சிங் யாதவ் ஆகியோரின் பதவிக்காலம் நவம்பவரில் முடிகிறது.

Tags : Parliament ,Corona , Parliament is half over due to the Corona threat: adjournment without specifying a date
× RELATED கொரோனா அச்சுறுத்தல் குறையும்...