போதை பொருள் வழக்கில் திருப்பம் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்: திரையுலகில் பரபரப்பு

மும்பை: போதை பொருள் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உட்பட 4 நடிகைகளுக்கு போதை தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்கும் போதைப்பொருள் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு சம்மன் அனுப்பினர். இதனால் போதைப்பொருள் வழக்கில் தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தீபிகா படுகோன், சாரா அலி கான், ஸ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேரில் ஆஜராகும்படி நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். போதை பொருள் வழக்கில் திடீர் திருப்பமாக முன்னணி நடிகைகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>