×

சென்னையில் விரைவில் மின்சார ரயில் சேவை: ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி. பேட்டி

சென்னை: சென்னையில் மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி. அருள் ஜோதி கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ரயில்வே துறையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குணமடைந்தோர் பணிக்கும் திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ள ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திர குமார்  கலந்து கொண்டு கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 பாதுகாப்புப்படை  வீரர்களுக்கு பூங்கொத்து, பழக்கூடை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய  மருந்துகள் போன்றவற்றை கொடுத்து வரவேற்றார்.  

மேலும் தொடர்ந்து பிளாஸ்மா  தானம் வழங்கிய 9 ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கினார். ரயில்வே பாதுக்காப்புப்படை ஆரம்பித்து 35வது ஆண்டு கொண்டாடும்  விதமாக அனைத்து ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மரக்கன்றுகள்  வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் லூயிஸ்  அமுதன், சென்னை கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன், சென்னை  சென்ட்ரல் பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் உள்ளிட்ட அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

பின்னர் ரயில்வே பாதுகாப்புபடை டி.ஐ.ஜி. அருள் ஜோதி கூறியதாவது: சென்னையில் மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  ரயில் சேவை தொடங்கும் போது பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொண்டு வருகிறோம். சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chennai , Electric train service soon in Chennai: Railway Security Force DIG Interview
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...