×

மதுரவாயல் அருகே திருட வந்த வீட்டில் போதையில் தூக்கம்: உணவு டெலிவரி ஊழியர் கைது

சென்னை: மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (53). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை இவரது வீட்டில் தண்ணீர் வரவில்லை என்பதால் பிளம்பரை அழைத்து வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றனர். அப்போது, அங்கு ஒரு நபர் பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இவர்களை கண்டு அந்த நபர் வீட்டின் மாடியில் இருந்து வேகமாக இறங்கி கீழே ஓடினார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் அந்த நபரால் தப்பி செல்ல முடியவில்லை. இதையடுத்து, இருவரும் சேர்ந்து அவரை மடக்கிப் பிடித்து மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கொளத்தூரை சேர்ந்த முத்தழகன்(23). இன்ஜினியரிங் மாணவர் என்பது தெரியவந்தது. மேலும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சரியாக வேலை கிடைக்காமல் இருந்தது. வீட்டு சூழ்நிலை மற்றும் கடன் பிரச்னை காரணமாக கடும் நெருக்கடியில் இருந்ததால் உணவு டெலிவரி செய்யும்போது ஆள்நடமாட்டமில்லாத வீடுகளை நோட்டமிடுவது வழக்கம். அதன்படி பிரபாகரன் வீட்டை கடந்த சில நாட்களாக நோட்டமிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் பைக்கில் வந்த முத்தழகன் அந்தப்பகுதியில் நிறுத்தி நைசாக பிரபாகரன் வீட்டின் காம்பவுன்ட் சுவரின் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்து  மாடிக்கு சென்று கதவை உடைக்க முயன்றார்.

முடியாததால் போதை மயக்கத்தில் அப்படியே தூங்கிவிட்டார். மறுநாள் காலை  எழுந்து பார்த்தபோது எந்த வழியில் எப்படி வந்தார் என்பது கூட அவருக்கு மறந்துவிட்டது. வெளிபக்க கதவும் பூட்டப்பட்டதால் வெளியில் வரமுடியாமல் அமர்ந்திருந்தபோது பிடிப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : house ,robbery ,Food delivery employee ,Maduravayal , Intoxicated sleep at the house where the robbery took place near Maduravayal: Food delivery employee arrested
× RELATED வீட்டை உடைத்து 8 சவரன் கொள்ளை