ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரத்தில் 4 பேரிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை

பெரம்பூர்: அயனாவரம் நியூ ஆவடி சாலையில் கடந்த மாதம் 21ம் தேதி ரவுடி சங்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த என்கவுன்டர் திட்டமிட்ட படுகொலை என சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் சங்கரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன்பின் உதவி கமிஷனர் ராஜா, இன்ஸ்பெக்டர் நடராஜ் உட்பட 7 போலீசார்   விசாரணைக்கு சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகி தங்கள் விளக்கத்தினை அளித்தனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாகஅயனாவரம் பெண் காவலர் ஜெயந்தி உள்ளிட்ட 6 பேரும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளித்தனர்.

அதன்பின்பு சிபிசிஐடி அலுவலகத்தில் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா, அவரது மகன் மோகன் மற்றும் உறவினர் உஷா ஆகிய 4 பேரும் ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தனர். சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட தினத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராணி, திலீப், தினகரன் ஆகியோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, 2 தினங்களுக்கு முன்பு சங்கர் நீலாங்கரையில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சிவகுமார், அவரது மனைவி சங்கரி, மகள் மற்றும் மைத்துனர் என 4 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

பின்னர் சிவகுமார் உள்ளிட்ட 4 பேரும் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு ஆஜராகி மாலை 6 மணி வரை சிபிசிஐடி போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்து எழுத்து பூர்வமாகவும் கையொப்பம் பெறப்பட்டது. விசாரணையில், இன்ஸ்பெக்டர் நடராஜ் அழைத்து செல்லும்போது சங்கர் சற்று மயக்கநிலையில் இருந்தார். இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு அவர் நாடகமாடுகிறார் என்று கூறி சங்கரை அழைத்து சென்றதாக வீட்டின் உரிமையாளர் சிபிசிஐடி போலீசாரிடம் கூறியதாக தெரியவந்தது. மேலும், இதில் சில மருத்துவர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், மேனகா உள்ளிட்டோரிடம் விசாரிக்கப்போவதாக சிபிசிஐடி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: