×

என்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் நிலக்கரி எடுப்பதற்காக சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் மண் குவியல்களை கொம்பாடிக்குப்பம், பொன்னாலகரம், கொளப்பாக்கம், ஊத்தங்கால் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் மலைமேடாகக் குவித்து வைத்துள்ளனர். அவ்வாறு குவித்து வைத்துள்ள மணல்மேட்டில் மழைக் காலங்களில் ஏற்படும் மண் சரிவால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 200 ஏக்கர் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் படிகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துவந்தனர். இந்நிலையில், என்.எல்.சி நிர்வாகம் மண் மேட்டில் இருந்து மழைநீர் வருவதை தடுக்கும் விதமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை மேற்கொண்டுவந்தது. அப்போது, என்.எல்.சி நிர்வாகம் பெண்ணாலகரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான விவசாய விளை நிலத்தில் மண்வெட்டும் பணியை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மழைக் காலங்களில் வடிகால் வாய்க்கால் இருந்து வரக்கூடிய தண்ணீரானது தனது விவசாய நிலத்தில் செல்வதற்கு என்.எல்.சி நிர்வாகம் வழிவகுப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் மண் வெட்டும் பணியில் ஈடுபட்ட இரண்டு இயந்திரங்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்ய முடியாமல் தங்களின் வாழ்வாதாரத்தை அழித்துவரும் என்.எல்.சி நிர்வாகம் எவ்வித இழப்பீடும் தரவில்லை என்றும், தற்போது என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள வடிகால் வாய்க்கால் பணியால் தங்களின் நிலம் முற்றிலுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால் தனது குடும்பத்துடன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தகவல் அறிந்து வந்த என்.எல்.சி நிறுவன அதிகாரிகள் சம்பந்தபட்ட நபரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் கலைந்து சென்றனர்.


Tags : Negotiations ,NLC , NLC, mowing machine, captive, farmer
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...