×

வேளாண் மசோதா, சஸ்பெண்ட் விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்க 5 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி

புதுடெல்லி: வேளாண் மசோதா, எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக 5 எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் ஜனாதிபதியை இன்று மாலை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சர்ச்சைக்குரிய வேளாண் மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சிலர் அமளியில் ஈடுபட்டதால், 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறக்கோரியும், வேளாண் மசோதாக்களில் திருத்தங்கள் கோரியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தொடர் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்ெதாடர் இன்றுடன் முடிவுறும் நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 5 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நெறிமுறைகள் காரணமாக, ஐந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும் ஜனாதிபதியை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகள் தரப்பில் மூன்று கோரிக்கை வைக்கப்படும். உணவு தானியங்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவாக தனியார் வாங்குவதில்லை. அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலை நிர்ணயம் தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.

இந்திய உணவுக் கழகம் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்’ என்றார். இதற்கிடையே, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் நடத்தைக்கு மன்னிப்பு கேட்ட பின்னரே இடைநீக்கத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்’ என்றார்.




Tags : Bill ,Opposition Leaders ,President , Agriculture Bill, Suspended, Affairs, President, Opposition
× RELATED பாஜகவில் சேர்ந்தோரின் ஊழல் வழக்கு முடித்துவைப்பு..!!