×

மணமேல்குடி செய்யானத்தில் காசிவிசுவநாதர் கோயில் சுவர் இடிந்தது: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அறந்தாங்கி: மணமேல்குடியை அடுத்த செய்யானத்தில் மிகப் பழமையான விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் 1967ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஓடுகளால் ஆன கோயிலின் ஒருபகுதி நேற்று முன்தினம் இரவு வீசிய காற்றில் இடிந்து விழுந்தது.

இரவு நேரத்தில் இடிந்து விழுந்ததால், பக்தர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாக பழைமையான ஆலயங்கள் விளங்குகின்றன. அத்தகைய பழங்கால ஆலயங்கள் பல வருவாய் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன. அத்தகைய ஆலயங்களை தமிழக அரசு கணக்கெடுத்து அவற்றிற்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும். அதைப்போல செய்யானம் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பழுதுகளை சீரமைத்து, திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: செய்யானம் கிராமத்தில் மிகவும் பழைமையான பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது.இக்கோயிலில் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாததால், கோயில் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து நாங்கள் பல்வேறு அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது வீசிய காற்றின் காரணமாக கோயிலில் ஒருபகுதி இடிந்து விழுந்துவிட்டது. எனவே கோயிலை ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைப்பதுடன் கோயிலுக்கு திருப்பணி செய்து குடமுழுக்க செய்ய இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Aranthangi, Kasi Viswanathar, temple, wall
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...