×

திருப்பத்தூரில் சுகாதார சீர்கேடு: ஏரியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த அந்தநேரி ஏரியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர்- சேலம் கூட்டுரோடு பகுதியில் அந்தநேரி ஏரி அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த ஏரியில் தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள் இந்த ஏரியில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘அந்தநேரி ஏரியையொட்டி கலைஞர் நகர், அண்ணாநகர், தில்லை நகர், பெரியார்நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள் நகராட்சி தூய்மைப்பணியாளர்களால் அந்தநேரி ஏரியில் கொட்டப்படுகிறது. நகராட்சி சார்பில் பஊச நகரில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

ஆனால், நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் குப்பைக்கழிவு மற்றும் மருத்துவக்கழிவுகளை அங்கே கொட்டாமல் நீர்நிலைகளில் கொட்டி வருவது வேதனையளிக்கிறது. இதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய முகக்கவசம், கையுறைகளும் அந்தநேரி ஏரியில் கொட்டி வருகின்றனர். இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அந்தநேரி ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக்கழிவுகளை உடனடியாக அகற்றவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் இது போன்ற வேலைகளை செய்திருக்க வாய்ப்பில்லை. தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவக்கழிவுகளை கொட்டியிருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்தனேரியில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : Tirupati ,lake , Tirupati, health disorder, medical waste
× RELATED சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு...