×

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் பின்னலாடை நிறுவனங்கள்

திருப்பூர்: கொரோனா தொற்றால், பல்வேறு பிரச்னைகளை சந்தித்த பின்னலாடை நிறுவனங்கள் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. கொரோனா தாக்கத்தால், திருப்பூர் பனியன் தொழில் கடும் பாதிப்பை சந்தித்தது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்த லட்சக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.இதேபோல், வடமாநில தொழிலாளர்களும் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வர தொடங்கியதால், திருப்பூர் தொழில்துறையினர் பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்காரணமாக, கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.தற்போது, கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.மேலும், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் பொது போக்குவரத்து தளர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்களில் தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது, கொரோனா அச்சத்தையும் தாண்டி இழந்த வர்த்தகத்தை மீட்டெடுக்கும் வகையில், அனைத்து நிறுவனங்களும் மும்முரமாக ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. திருப்பூரை பொறுத்தவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் திருப்பூருக்கு திரும்பிவிட்டார்கள். இதனால், 80 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்புகிறது. இருப்பினும், வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு ரயில் வசதி இல்லாததால், தற்போது மட்டும் 1 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்ப முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொழிலாளர்கள் திரும்புவதற்கு அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Knitting companies , Corona, Textile companies
× RELATED நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்...