×

சோதனைச்சாவடி அமைத்து தீவிர சோதனை: ஏலகிரி மலையில் இ-பாஸ் கட்டாயம்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை  உள்ளது. இது தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களுக்கு செல்ல தற்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சமூக இடைவெளியுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால் தற்போது பேருந்துகளிலும், கார், இருசக்கர வாகனம் போன்றவைகளில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏலகிரி மலையை சுற்றிப் பார்க்க வந்து செல்கின்றனர். ஆனால் ஏலகிரி மலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்ற நிலைப்பாட்டில் இங்கு உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள 14 கொண்டை ஊசி வளைவுகளையும், மழைச்சாரல்களையும், ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையையும் கண்டு ரசிக்க வந்து செல்கின்றனர்.

அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கலெக்டர் சிவன் அருள் உத்தரவின் பேரில், எஸ்பி விஜயகுமார் அறிவுறுத்தலின்படி ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் ஏலகிரி மலை அடிவாரத்தில் வாகன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வெளிமாநிலத்தில் இருந்தும் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் இ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே ஏலகிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இ-பாஸ் பெறாமல்  வருபவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இ-பாஸ் இல்லாமல் வந்த சுற்றுலா பயணிகளை மேலே செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மலைக்கிராம மக்களுக்கு ஆதார் கார்டு

ஏலகிரி மலையில் உள்ள மலைக்கிராம  மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக பொன்னேரி, ஜோலார்பேட்டை,  திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இ-பாஸ் அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மலைக்கிராமங்களுக்கு செல்வதாக சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் விதமாக மலைக்கிராம மக்கள் ஆதார் அட்டையை காண்பித்து சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

Tags : Checkpoint ,Yelagiri Hills , E-Pass Compulsory, Yelagiri Hill
× RELATED தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!!