×

குமரி முழுவதும் கனமழை நீடிப்பு: ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கின

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்த நிலையில் ஆயிரக்காணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது. விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 32.65 அடியாக இருந்தது. அணைக்கு 1123 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 163 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

மழை காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.88 அடியாக இருந்தது. அணைக்கு 1453 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணை மூடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 11.31 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 258 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 11.41 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கையில் 9.70 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 54.12 அடியும், முக்கடல் அணையில் 17.8 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. நாகர்கோவில் அருகே புத்தேரி புளியடி பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நெல் வயல்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் முளைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் ரப்பர் பால்வெட்டு, செங்கல் உற்பத்தி போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

1,200 ஏக்கர் நீரில் மூழ்கியது

ஆரல்வாய்மொழி:  தாழக்குடி, சீதப்பால், வீரநாராயணமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவை தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறுவடை பணி தொடங்கியது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைந்த வயல்களில் தண்ணீர் தேங்கி, நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழகி வருகின்றன. வருவாய் கிடைக்கும் நேரத்தில் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் வீணானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுபோல் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.

சாலை பணிகள் நிறுத்தம்

தமிழக முதல்வர் வருகைக்காக அவசர அவசரமாக சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அவரது வருகை ரத்து செய்யப்பட்டதால் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக கொண்டுவரப்பட்டு சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லி உள்ளிட்ட பொருட்களையும் திரும்ப எடுத்து சென்றுவிட்டனர். இவை ஒருபுறம் இருக்க நாகர்கோவில் நகர பகுதியில் முதல்வர் வருகைக்காக போடப்பட்ட சாலைகள் பலவும் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்ட குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் தார் வைத்து சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் மண் இருப்பு ஏற்பட்டு புதியதாக பள்ளங்கள் ஏற்பட தொடங்கியுள்ளது. அவை நேற்று பெய்த மழை காரணமாக மேலும் உருக்குலைந்து புதிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென் தமிழக கடல் பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 3.3 மீட்டர் உயரம் முதல் 3.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 25ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : paddy fields ,Kumari , Heavy rain, Nagercoil
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை