×

மலைப்பகுதியில் தொடருது மழை: குற்றால அருவிகளில் கொட்டுது வெள்ளம்

தென்காசி: குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆக்ரோசமாக கொட்டுகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலத்தில் சரிவர சாரல் மழை பெய்யவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஓரளவு சாரல் பெய்தது. ஆனால் தற்போது சீசன் காலம் நிறைவடைந்து செப்டம்பர் மாதத்திலும் நன்றாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் அவ்வளவாக இல்லை.  பகல் மற்றும் இரவு வேளைகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகலிலும் வெயில் இல்லை. வானம் எப்பொழுதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான காற்று வீசியது.

நேற்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய வற்றிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. நோய்த்தொற்று காலமாக இருப்பதால் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

Tags : hills ,floods ,Courtallam , Courtallam Falls, Rain
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...