தோனி 7ம் நிலையில் இறங்கியது தவறான கணக்கே; சரியான கேப்டன்ஷிப் இல்லை; தோனி முன்னரே களமிறங்கிருக்க வேண்டும்: கவுதம் கம்பீர் சாடல்

ஐபிஎல் தொடரின் 4-வது லீக் ஆட்டம் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங் அணி மோதியது. அதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தது. பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர். வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜய் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். 217 ரன்கள் இலக்கை விரட்டும் போது 7-வது இடத்தில் இறங்குவது ஒரு கேப்டனுக்கு அழகா? என தோனியை கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக கேப்டன் தோனி 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கியது விமர்சனத்தை உண்டுபண்ணியது. தோனி முன்னரே களமிறங்கிருக்க வேண்டும் என்றும் ரசிகர்களிடையே முனுமுனுப்பு ஏற்பட்டது.

ருதுராஜ் கெய்க்வாடை இறக்கிய பிறகு தோனி, தான் இறங்க முடிவெடுத்தது, சாம் கரணை முன்னால் களமிறங்கச் செய்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இது அர்த்தமுள்ளதாக தெரியவில்லை. கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்தியிருக்க வேண்டாமா? இதை கேப்டன்ஷிப் என்று அழைக்காதீர்கள் என கூறினார். தோனி இறங்கும்போது ஆட்டம் முடிந்து விட்டது. ஃபாப் டுபிளெசிஸ் தனி வீரராக போராடிக் கொண்டிருந்தார். உடனே கடைசி ஓவரில் தோனி 3 சிக்சர்கள் அடித்தார் என்று கூறுவார்கள். அதனால் என்ன பயன்? அது அவரது சொந்த ரன்கள் அவ்வளவே என தெரிவித்தார். தோனி செய்ததையே மற்றவர்கள், மற்ற கேப்டன்கள் செய்தால் என்ன ஆகியிருக்கும்? தோனி என்பதால் ஒருவரும் வாயைத் திறப்பதில்லை என கூறினார்.

சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் சாம் கரனை இறக்கி விடுவது, தோனி தன்னை விட சாம் கரணை தான் சிறந்தவர் என்று நம்புகிறார் போல் தெரிகிறது என குற்றம்சாட்டினார். தோனி முன்னால் இறங்கி அவுட் ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. அதில் தவறொன்றுமில்லை. குறைந்தபட்சம் அணியை முன்னின்று வழிநடத்தியிருக்கலாம், உத்வேகம் அளித்திருக்கலாம் அதுவும் அவர் செய்யவில்லை என கூறினார். கடைசி ஓவரில் ஆடிய ஆட்டத்தை 4ம் நிலை அல்லது 5ம் நிலையில் இறங்கிச் செய்திருந்தால் டூ பிளெசிஸ் உடன் சேர்ந்து இதை ஒரு சுவாரஸ்யமான ஆட்டமாக மாற்றியிருக்கலாம் என தெரிவித்தார். ஆனால் அப்படி சவாலாக இருக்க வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அவருக்கு இல்லை என கூறினார். தோனி 7ம் நிலையில் இறங்கியது தவறான கணக்கே. சரியான கேப்டன்சி இல்லை என பேட்டியளித்தார். தோனி போன்ற ஒருவரிடம் யாரும் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்று கம்பீர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் இது போன்ற தவறுகளை டோனி எதிர்வரும் போட்டிகளில் தவிரிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories:

>