×

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன்கடைக்காரர் மோகன் மீது கந்து வட்டி புகார் : வழக்கு பதிவானதை தொடர்ந்து மோகன் தலைமறைவு

மதுரை : பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன்கடைக்காரர் மோகன் மீது அண்ணா நகர் போலீசில் கந்து வட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். இவர், தனது மகள் நேத்ராவின் எதிர்கால கல்வி மற்றும் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தில் இருந்து அப்பகுதியில் வசிக்கும் 1,000த்துக்கும் மேற்பட்டோருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சிறப்பு தொகுப்பை மோகன் வழங்கியுள்ளார்.

இதனிடையே, கடந்த மே மாதம் நடைபெற்ற மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சலூன் கடை உரிமையாளர் மோகனை பாராட்டினார். இதையடுத்து,மதுரை சலூன்கடைக்காரர் மோகன் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன் பாஜகவில் இணைந்துள்ளார். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் மோகன் மற்றும் அவரது மனைவி பாஜகவில் இணைந்து கொண்டனர். சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த மோகன் கந்து வட்டி தொழிலும் செய்து வந்தததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்புநகரை சேர்ந்த செங்கைராஜன் என்பவர் பாஜக நிர்வாகி மோகனிடம் ரூ. 30,000 கடன் வாங்கி திருப்பி செலுத்தியுள்ளார்.கடனை திருப்பி செலுத்தியும் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்வதாக மோகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கைராஜன் தொடுத்த புகாரில் கந்துவட்டி சட்டத்தில் பாஜக நிர்வாகி மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கந்து வட்டி தொடர்பான விசாரணைக்கு அழைத்த நிலையில், சலூன் கடைக்காரர் மோகன் தலைமறைவானதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Mohan ,Madurai , Name, change, Anna University, Governor, Purohit, Professors, Letter
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த...