×

ரியாத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டியது அம்பலம்

திருவனந்தபுரம்: ரியாத்தில் இருந்து கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட கேரளாவை சேர்ந்த 2 தீவிரவாதிகளும், லஷ்கர் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஹவாலா மூலம் நிதி திரட்டி அனுப்பியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2014ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம், கண்ணூரை சேர்ந்த சுகைப் என்பவரை என்ஐஏ தேடி வந்தது. இதேபோல், டெல்லி குண்டு வெடிப்பு மற்றும் ஹவாலா வழக்கில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது புல்நவாஸ் என்பவரையும் என்ஐஏ தேடி வந்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் சுகைப் இருப்பது தெரிய வந்தது. அங்கு திருமணமும் செய்துகொண்ட அவர் வியாபாரம் செய்து வந்தார். அங்கிருந்து, அவர்  அடிக்கடி ரியாத் சென்று வருவதாக என்ஐஏ.வுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுபோல், முகமது புல்நவாஸ் ரியாத்தில்  இருந்து வந்தார்.

இதையடுத்து, இவர்கள் 2 பேரையும் பிடிக்க என்ஐஏ, ‘இன்டர்போல்’ உதவியை நாடியது. இன்டர்போல் விசாரணை நடத்தி, தீவிரவாதிகள் இருவரும் ரியாத்தில் இருக்கும் தகவலை என்ஐஏ.வுக்கு அளித்தது. இதைத்தொடர்ந்து, 2 வாரங்களுக்கு முன்பு ரியாத் சென்ற என்ஐஏ குழு, இருவரையும் கைது செய்து நேற்று முன்தினம் விமானம் மூலம் திருவனந்தபுரம் அழைத்து வந்தது. இந்நிலையில், முகமது புல்நவாஸை திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் வைத்து ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுபோல், சுகைப் இரவோடு இரவாக கொச்சி என்ஐஏ அலுவலகம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து, நேற்று சுகைப் பெங்களூருவுக்கும், முகமது புல்நவாஸை டெல்லிக்கும் அழைத்து சென்றனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீவிரவாத இயக்கத்துக்காக கேரளாவில் இருந்து ஹவாலா மூலமாக நிதி திரட்டி சுகைப் அனுப்பியது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

* கைது செய்யப்பட்ட இந்த 2 தீவிரவாதிகளும், தொடக்கத்தில் தடை செய்யப்பட்ட ‘சிமி’ அமைப்பில் செயல்பட்டு வந்துள்ளனர்.
* பின்னர், இந்தியன் முஜாகிதீன் அமைப்பில் சுகைப்பும், லக்‌ஷர்-இ-தொய்பா இயக்கத்தில் முகமது புல்நவாசும் சேர்ந்துள்ளனர்.

Tags : militants ,Riyadh , Arrested militants in Riyadh exposed fundraising for the militant movement
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி