×

சாத்தான்குளம்போல திருப்பூரில் சம்பவம்: போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி பலி

திருப்பூர்: திருப்பூரில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். கலெக்டர் விஜயகார்த்திகேயன் காரை உறவினர்கள் வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.  திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 22ம் தேதி மணிகண்டன் அந்த மூன்று பெண்களில் ஒருவரை பார்ப்பதற்காக செட்டிப்பாளையம் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த தேனியை சேர்ந்த சரண்யாவுக்கும் (20), மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரத்தில் மணிகண்டன் கொதிக்கும் வெந்நீரை சரண்யா மீது ஊற்றினார். படுகாயமடைந்த அவர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 16ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த  திருப்பூர் ஊரக போலீசார் நேற்று காலை மணிகண்டனை வீட்டுக்கு வந்து அழைத்து சென்றனர். பின்னர், காவல் நிலையத்தில் மணிகண்டனுக்கு வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து, வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து மணிகண்டன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின்தடை ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் 2 பேர் இறந்தது தொடர்பாக ஆய்வு செய்ய வந்த கலெக்டர் விஜயகார்த்திகேயன் காரை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் விஜயகார்த்திகேயன் கூறுகையில், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீசாரும் குற்றவியல் சட்டம் 176ன்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை நீதிபதி விசாரிக்க உள்ளார்.  பிரேத பரிசோதனைக்குபின்தான் முழு விபரமும் தெரியவரும்.  விசாரணை நிறைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.  கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று உறவினர்கள் நேற்று இரவு மணிகண்டனின் உடலை வாங்கி சென்றனர்.

மர்ம உறுப்பில் அடித்துள்ளனர்
இதுகுறித்து மணிகண்டனின் அக்கா ராஜேஸ்வரி கூறுகையில், ‘காலை 6 மணிக்கு மணிகண்டனை அழைத்து சென்றனர். பின்னர், நாங்களும் காவல்நிலையம் சென்றோம்.  சிறிது நேரத்தில் அவருக்கு வலிப்பு வந்ததாக கூறி ஆட்டோவில் அழைத்து சென்றார்கள். அதன்பின், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக கூறினர். எனது தம்பியின் மர்மஉறுப்பில் பலமாக தாக்கியுள்ளனர். உள்ளாடை முழுவதும் ரத்தக்கறையாக உள்ளது. சாத்தான்குளம் சம்பவம்போல என தம்பியை கடுமையாக தாக்கி உள்ளனர். போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.


Tags : Incident ,Tirupur ,police investigation ,Sathankulam , Incident in Tirupur like Sathankulam: Worker killed while being taken for police investigation
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...