×

லடாக்கில் பதற்றத்தை தணிக்க 14 மணி நேரம் நீடித்த 6ம் கட்ட பேச்சுவார்த்தை: சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா இடையே நடந்த 6ம் கட்ட பேச்சுவார்த்தை 14 மணி நேரம் நீண்டது. இதில், எல்லையில் மோதலுக்கு வழிவகுக்கும் அனைத்து இடங்களில் இருந்தும் சீன படைகள் உடனடியாக, விரைவில் திரும்பப் பெற வேண்டியது அவசியம் என இந்திய தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த மாதம் 29, 30 தேதிகளில் பாங்காங் திசோ ஏரி, கோங்கா லா, கோக்ரா பகுதிகளில் சீனா அத்துமீறி ஊடுருவ முயன்றதால் இந்திய படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டி எச்சரித்தனர்.

இதன் மூலம், 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய, சீன எல்லையில் துப்பாக்கி குண்டு சத்தங்கள் கேட்டுள்ளன. இந்த பிரச்னை தொடர்பாக கடந்த 10ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எல்லையில் பதற்றத்தை தணிக்க 5 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா இடையே ராணுவ மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. சீனாவின் மோல்டோ பகுதியில் காலை 9 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 14 மணி நேரமாக இரவு 11 மணி வரை நீடித்தது.

இதில், பாங்காங் திசோ பகுதியில் மோதலுக்கு வழிவகுக்கும் அனைத்து இடங்களில் இருந்தும் சீன படைகள் முழுமையாகவும் விரைவாகவும் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், முதலில் அத்துமீறியது சீனா என்பதால் முதலில் அவர்கள்தான் படைகளை வாபஸ் பெற வேண்டும் என இந்திய தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.  ஒருவேளை சீன தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டாவிட்டால், இந்திய ராணுவம் தற்போதுள்ள இடங்களில் இருந்து பின்வாங்காமல் நிலைத்திருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது இரு தரப்பிலும் செய்து கொண்ட 5 அம்ச ஒப்பந்தங்களின்படி, இரு தரப்பிலும் எல்லையில் படைகளை விலக்கி கொள்ளுதல், பதற்றத்தை தவிர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக மேலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென இரு தரப்பு அதிகாரிகளும் கூறி உள்ளனர்.

அக்டோபருக்குள் வாபஸ் பெற வேண்டும்
வரும் அக்டோபரில் குளிர் காலம் தொடங்குவதால் அதற்கு முன்பாக பதற்றத்தை தணிக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. குளிர்காலத்தில் லடாக்கில் இருதரப்பு எல்லைப் பகுதியில் மைனஸ் 25 டிகிரி வரை கடும் குளிர் நிலவும். அந்த சமயத்தில் சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது என்பதால் மனிதர்கள் உயிர் வாழ்வதே சிரமமாகும்.

2 மடங்கு பலத்தை அதிகரித்த சீன படை
இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தனது விமானப்படை தளம், வான் பாதுகாப்பு அமைப்பு, ஹெலிகாப்டர்கள் இறங்குதளம்  ஆகியவற்றை கடந்த 3 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய பாதுகாப்பு ஆலோசனை அமைப்பான ஸ்டராட்போர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2017ம் ஆண்டு டோக்லாம் மோதல் சம்பவத்தை அடுத்து சீன, இந்திய எல்லையில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் 3 ஆண்டுகளில் 3 விமானப்படை தளங்கள்,5 வான்பாதுகாப்பு அமைப்புகள், 5 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என மொத்தம் 13 புதிய ராணுவ நிலைகளை சீனா கட்டமைத்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.


Tags : Phase ,talks ,Ladakh ,China ,India , Phase 6 of 14-hour talks to ease tensions in Ladakh: India issues stern warning to China
× RELATED 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதியில் மனு தாக்கல் துவக்கம்