×

அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய மேலும் 1 ஆண்டு கால அவகாசம்: தமிழக அரசு உத்தரவு

மாநிலம் முழுவதும் மலைப்பிரதேச மாவட்ட பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்த முடியவில்லை.

சென்னை: மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய மேலும் 1 ஆண்டு கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 2017 முதல் மாநிலம் முழுவதும் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்தலாம் என்று வீட்டுவசதித்துறை அரசாணை வெளியிட்டது.  இதற்காக பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வரன்முறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், வரன்முறைப்படுத்துவதற்கான கட்டணம் அதிகம் என்பதால் பலர் வரன்முறை செய்ய முன்வரவில்லை.

குறிப்பாக, 14 லட்சம் மனைகள் வரன்முறை செய்ய வேண்டிய நிலையில் 2 லட்சம் மனைகள் கூட வரன்முறை செய்யப்படவில்லை. இந்நிலையில் 2017 அரசாணையில் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், கோவை தெற்கு 14 கிராமங்கள், கோவை வடக்கு 6 கிராமங்கள், உடுமலைப்பேட்டையில் 7 கிராமங்கள், மேட்டுபாளையத்தில் 7 கிராமங்கள் திண்டுக்கல் 10 கிராமங்கள், ஈரோடு மாவட்டத்தில் 20 கிராமங்கள் கன்னியாகுமரியில் 5 கிராமங்கள், நாமக்கல்லில் 15 கிராமங்கள், திருநெல்வேலியில் 20 கிராமங்கள், அம்பாசமுத்திரம் 8 கிராமங்கள் என மாநிலம் முழுவதும் மலைப்பிரதேச மாவட்ட பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த மார்ச் 22ம் தேதி மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்யலாம் என்று அரசாணை வெளியிட்டது. இதற்காக, 6 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுடன் இந்த கால அவகாசம் முடிவடைந்தது. ஆனால், இன்னும் பலர் வரன்முறை செய்ய விண்ணப்பிக்கவில்ைல. இதை தொடர்ந்து அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய மேலும் 1 ஆண்டு கால நீட்டிப்பு செய்து தமிழக அரசின் வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.


Tags : lands ,Government of Tamil Nadu , 1 more year to standardize unauthorized lands: Government of Tamil Nadu order
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...