×

வெப்ப சலனம் நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக் காற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் தற்போது, காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால், கேரளாவில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதேபோல தமிழகத்தில் வெப்ப சலனம் நீடித்து வருவதால், பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, அவலாஞ்சி, பந்தலூர் 110 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று சத்தீஷ்கர் மாநிலம் மற்றும் அதை ஒட்டிய நிலப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அதிக மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ேமலும் தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும், காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தென் தமிழகம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.


Tags : Tamil Nadu ,Meteorological Center ,heat wave , Rains will continue in Tamil Nadu due to prolonged heat wave: Meteorological Department
× RELATED மார்ச் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை...