×

பெற்றோர் எதிர்த்ததால் வீட்டை விட்டு வெளியேறிய தர்மபுரி காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

திருப்போரூர்: தர்மபுரி மாவட்டம், தர்மபுரி நகரம், அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் அரவிந்தசாமி (25). தச்சு வேலை செய்கிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த ஹரிலட்சுமி (19) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலிக்கின்றனர். இவர்களது காதல் விவகாரம், ஹரிலட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. இதையடுத்து அவர்கள், அரவிந்த்சாமியை கண்டித்தனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, அதியமான் கோட்டை அருகே முனீஸ்வரன் கோயிலில் திருமணம் செய்து கொண்டது. அவர்கள் திருமணம் செய்ததை அறிந்த ஹரிலட்சுமியின் உறவினர்கள், இருவரையும் தேடிவந்தனர்.

இதனால், இருவரும், கேளம்பாக்கம் அருகே ரத்தினமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அவர்களது செல்போன் எண்ணை, வைத்து ரத்தினமங்கலம் பகுதியில் இருப்பதை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள், காதல் ஜோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன காதல் ஜோடி, நேற்று மாலை தாழம்பூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது. அங்கு, தங்களுக்கு திருமணம் ஆகி விட்டது. எங்களது உறவினர்கள், எங்களை கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரித்த போலீசார், அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு, இருவரும் மாயமானதாக அவர்களது குடும்பத்தினர் கொடுத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் ஹரிலட்சுமி, நான் 18 வயது நிறைவடைந்த மேஜர். எனது சுய விருப்பத்தின் பேரில் அரவிந்தசாமியை திருமணம் செய்து கொண்டேன். தர்மபுரி போலீசாருடன் செல்ல மாட்டேன் என உறுதியாக தெரிவித்தார். தேவைப்பட்டால் தன்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தனது தரப்பை தெரிவித்து கணவருடன் செல்ல அனுமதி கேட்பதாகவும் கூறினார். இதனால் செய்வதறியாது திகைத்த தாழம்பூர் போலீசார் காதல் தம்பதியினரை மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அனுப்பி வைத்தனர்.

Tags : Dharmapuri ,home ,police station , The Dharmapuri romantic couple, who left home due to parental opposition, took refuge in the police station
× RELATED வைரல் தம்பதி!