மதுராந்தகம் விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள விநாயகர் கோயில் உண்டியலை உடைத்த மர்மநபர்கள், அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மதுராந்தகம் பஜார் வீதியில் மேல் மருவத்தூர் - மதுராந்தகம் நெடுஞ்சாலையின் இடது ஓரமாக இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான ஸ்ரீசக்தி புஷ்ப விநாயகர் ஆலயம் உள்ளது. உமாமகேஸ்வரன் என்பவர், அர்ச்சகராக வேலை பார்க்கிறார். இங்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து வழிப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அர்ச்சகர் உமாமகேஸ்வரன், பூஜைகள் முடிந்து கோயிலை பூட்டிவிட்டு சென்றார்.

நேற்று காலை, அவ்வழியாக பொதுமக்கள் சென்றனர். அப்போது, கோயில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின், கடந்த மாதம் 17ம் தேதி கோயில் திறக்கப்பட்டு, உண்டியலில் இருந்த சுமார் ரூ.80 ஆயிரம் அறநிலைய துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதை நோட்டமிட்ட மர்மநபர்கள், உண்டியலை உடைத்து கொள்ளையடித்தது தெரிந்தது. தொடா்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>