×

கொண்டமங்கலம் ஊராட்சி செயலாளராக உள்ளூரை சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: காலியாக உள்ள கொண்டமங்கலம் ஊராட்சி செயலாளர் பதவிக்கு, உள்ளூரை சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநர் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கொண்டமங்கலம் ஊராட்சியை சேர்ந்த டில்லிகுமார் தலைமையில், பொதுமக்கள் செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட திட்ட இயக்குநர் செல்வகுமார் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கொண்டமங்கலம் ஊராட்சியில், கடந்த 2 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளர் பதவி காலியாக உள்ளது. இதையொட்டி, ஊனமாஞ்சேரி ஊராட்சி செயலாளர், கொண்டமங்கலம் ஊராட்சி பணிகளையும் சேர்த்து கூடுதலாக கவனித்து வருகிறார். ஆனாலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு உள்பட அடிப்படை வசதிகளை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடத்தை பூர்த்தி செய்ய கடந்த 7 மாதத்துக்கு முன்பு  காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. இதில் கொண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் இதுவரை அந்த பணியிடத்தை நிரப்பவில்லை. ஊராட்சி செயலாளர் பணியிடத்துக்கு, நேர்காணலில் பங்கேற்ற 200 பேரில், ஒருவரை நியமிக்காமல் வேறு ஊராட்சி செயலாளரை பணியமர்த்த ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர். இதனை உடனடியாக நிறுத்தவேண்டும். உள்ளூரை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கவேண்டும்.

கிராம ஊராட்சி சட்டத்தில், தகுதியுடைய உள்ளூர் மக்களுக்கே ஊராட்சி செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனை மீறி அதிகாரிகள் மற்ற ஊராட்சி செயலாளர்களை நியமிக்ககூடாது என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட திட்ட இயக்குநரின் நேர்முக உதவியாளர் ஆனந்தனிடம் கேட்டபோது, காலியாக உள்ள கொண்டமங்கலம் ஊராட்சி செயலாளர் பணியிடத்தை நிரப்ப, கடந்த நவம்பர் மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, அப்பணிக்கு, வேறு ஊராட்சி செயலாளரை நியமிக்க உள்ளதாக புகார் வந்துள்ளது. இதன்மீது, விசாரணை நடத்தி  உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியுள்ளவர்கள் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், அதுவரை தற்போதையள நிலையே தொடரும் என்றார்.

Tags : Panchayat Secretary ,locals , Kondamangalam Panchayat Secretary should be appointed by the locals: Villagers demand
× RELATED அரக்கோணத்தில் ரூ.1.79 கோடியில் வளர்ச்சி ...