×

தென்னக வரலாறு புறக்கணிப்பு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் தென்னக வரலாறு புறக்கணிக்கப்படுகிறது. எனவே,  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கல்வி முறை புதிய அவதாரம் எடுத்திருக்கும் இன்றைய காலக் கட்டத்தில், சிபிஎஸ்இ.யின் பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ெவவ்வேறு வரலாற்றுப் பாடங்கள் இருக்க முடியுமா?. இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி புரிந்த, தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட பாண்டிய வம்சத்தைப் பற்றி, தமிழக குழந்தைகளுக்கே தெரியாத நிலை உள்ளது. சோழர்கள் மற்றும் பிற பிரபலமான பேரரசுகள் வரலாற்றையும் பாடத் திட்டத்தில் சேர்க்கலாம்.

வட இந்திய பாடத் திட்டம் மாணவர்களின் கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க உதவாது. ஏனென்றால், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக வரலாற்றைக் கற்பிப்பது அவசியம்.பொதுவாக தேசிய அளவிலான பாடத்திட்டத்தில் தென்னகத்தைச் சார்ந்த வரலாறுகள் புறக்கணிக்கப்படுகின்றன. பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்களை எல்லாம் நீக்கிவிட்டு, ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருப்போரை வைத்து பாடத்திட்டத்தை தயாரிக்கின்றனர். இதன்மூலம்    இந்துத்வா கொள்கைகளை மறைமுகமாக திணிக்கும் போக்கு உள்ளது. இந்தியாவில் உள்ள மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்
வகையில் விஷமத்தனமாக பாடத்திட்டத்தை பாஜ அரசு கொண்டு வருகிறது.

இதன்மூலம் பன்முகத்தன்மை கொண்ட இந்திய கலாச்சாரத்தை சிதைக்கும் முயற்சி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எனவே, வரலாறு குறித்த பாடத்திட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். அதற்கேற்றாற்போல், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Southern History Ignore: CBSE syllabus needs to be changed: KS Alagiri
× RELATED 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி...