×

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க., எம்எல்ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் 2017ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர். திமுக எம்எல்ஏக்களின் இந்த நடவடிக்கை அவையின் மாண்புக்கு எதிரானது என்று கூறி திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப் பேரவை உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி அவர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை காலத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.  இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார்ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிமைமீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசில், அடிப்படை தவறுகள் உள்ளன. இந்த நோட்டீசின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என கூறி உரிமை மீறல் குழுவின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர்.  மேலும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாக கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிய நோட்டீஸை அனுப்பலாம். நோட்டீஸ் மீது மனுதாரர்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

 இந்த நிலையில் கடந்த 7ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு  தி.மு.க., எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் செப்டம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தரப்பில் வக்கீல்கள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு ஆஜராகி, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.Tags : DMK ,infringement panel ,hearing ,High Court , DMK case against notice sent back by infringement panel in Gutka case: High Court hearing today
× RELATED திமுக பிரமுகர் கொலை குண்டர் சட்டத்தில் நான்கு பேர் கைது