×

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடையில் பயோ மெட்ரிக் அமல்: கைரேகை குளறுபடியால் கடையை முற்றுகையிட்டு பெண்கள் ஆவேசம்!!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நியாயவிலை கடைகளில் பயோ மெட்ரிக் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே பல குளறுபடிகள் அரங்கேறின. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது ஸ்மார்ட் கார்டு மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் ஸ்மார்ட் கார்டை யார் எடுத்து சென்றாலும் அவர்களுக்கு பொருட்களை கொடுக்க முடியும். எனவே இந்த நடைமுறையில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வந்தது.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படும் என தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது. மேலும் இந்த திட்டத்தின்படி, ரேஷன் கார்டுகளில் பெயர் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே, ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவியில் கைரேகையை பதிவு செய்வது அவசியம். இந்த நடைமுறைக்கு இணையதள வசதி இருப்பதுடன், தொலைத்தொடர்பு சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும். இவற்றின் மூலம் போலியாக மற்றவர்கள் பொருட்களை பெறுவதை தடுக்க முடியும்.

 இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பயோ மெட்ரிக் முறையில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியுள்ளன. அதாவது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1132 நியாயவிலை கடைகளிலும் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்வது இன்று நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து கள்ளுக்கடை மேடு பகுதியில் ரேஷன் பொருட்களை வாங்க காலை முதல் மக்கள் காத்திருந்த நிலையில், பலரின் கைரேகை பதிவு ஏற்கப்படவில்லை.

காலை முதல் காத்திருந்தும் பொருட்கள் வாங்க முடியாத ஆத்திரத்தில் பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைரேகை ஏற்காமல் போனால் செல்போனுக்கு ஓ.டி.பி., எண்ணை அனுப்பி பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கைரேகை ஏற்கவில்லை என கூறி திருப்பி அனுப்பப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அப்புறப்படுத்தி கடைகளை மூடின. இதனால் ரேஷன் பொருட்களை வாங்க வந்த மக்கள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : ration shop ,shop ,district ,Women ,Erode , Bio-metric implementation in Erode ration shop: Women are furious after besieging the shop due to fingerprint mess !!
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா