×

ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க முடிவு: எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து

டெல்லி: ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்க முடிவு என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இருப்பினும் பாதுகாப்பு சார்ந்த மற்றும் அவசர வேலைகள் தொடர்பான ரயில்வே பணிகள் மட்டும் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் பதிலளித்துள்ளார். ரயில்வே மேம்பாட்டு திட்டங்கள், இந்த நிதியாண்டு முழுவதும் நிறுத்தப்படுவது என்பது ரயில்வே மேம்பாட்டை மட்டுமின்றி வேலை உருவாக்கத்தையும் பாதிக்கும் என்று கூறியுள்ள சு.வெங்கடேசன், இந்தியா மிகப்பெரிய வேலையிழப்பு, வேலையின்மை நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். வேலை உருவாக்கத்தில் அரசு ஈடுபட வேண்டும் என்பதே சரியாக இருக்க முடியும்.

ஆனால் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களையே முடக்குவது என்பது எதிர் திசையில் பயணிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் கொடுத்திருக்கும் பதிலில் தமிழக எல்லைக்குள் வரும் எந்த புதிய வழி பாதை, அகலப்பாதை, இரட்டைவடி திட்டமும், தற்காலிக நிறுத்த பட்டியலில் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் இருப்பதாகவும் கூறியுள்ள சு.வெங்கடேசன், அமைச்சரின் இப்பதிலை தென்னக ரயில்வே பொது மேலாளர் உறுதி செய்வதோடு அதற்கான நிதி, தங்கு தடையின்றி வந்துள்ளதா? என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ரயில் திட்டங்கள் ஏதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், கிடப்பில் போடவும் அல்லது ரத்து செய்யவும் முடிவுகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்றும்  கேள்வி முன்வைக்கப்பட்டது.


Tags : S. Venkatesh , Railway project, suspension, regret, MP. S. Venkatesh
× RELATED மழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம்...