×

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அத்தியாவசிய பொருள்கள் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி, : அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அத்தியாவசிய பொருள்கள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன் அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராவ் சாஹிப் பட்டீல் தண்வி, ‘அத்தியாவசியப் பொருள்கள் மசோதா மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். நுகர்வோரும்  லாபம் அடைவார்கள்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதாவுக்கு  பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அந்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் மாநிலங்களவையில்  அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அதன் மீதான விவாதங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் சில பரிந்துரைகளை செய்திருந்தன. ஆனால், 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால், குரல் வாக்கெடுப்பு மூலம்   அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  எதிர்க்கட்சி வரிசைகளில் உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில் பாஜக கூட்டணி கட்சியினர் மட்டும் பேசி வருகின்றனர். உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ், மாநிலங்களவையை நடத்தினார்.


Tags : Opposition , Tiruppur, Hospital, Electricity, Patients...
× RELATED எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் வாக்கு...