×

இந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க மறுப்பு எனப் புகார் : இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருவதாக ஸ்டாலின் கண்டனம்

சென்னை : அரியலூர் மாவட்டத்தில் மொழிப் பிரச்சினையைப் பேசி, ஓய்வுபெற்ற அரசு மருத்துவருக்கு வங்கிக் கடன் வழங்க மறுத்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 15 வருடங்களாக கணக்கு வைத்து வாடிக்கையாளராக உள்ளார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு தனது நண்பருடன் சென்றுள்ளார்.  வங்கியில் தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் பட்டேல்  என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டு உள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், உங்களுக்கு இந்தி தெரியுமா என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் எனக்கு இந்தி தெரியாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதற்கு வங்கி மேலாளர்,  நான் மகாராஷ்டிராவை சேர்ந்தவன். இந்தி ெதரியும். இது மொழி பிரச்னை என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவணங்களை காண்பித்து உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும், வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது எனக்கூறி பாலசுப்பிரமணியனை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி! இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பாஜக அரசின் பின்புலம் இதற்குக் காரணமா? எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை! எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Stalin , Online class, action, Minister Senkottayan, warning...
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...