×

சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்ட தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது!!

டெல்லி: சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கடந்த 20ம் தேதி மாநிலங்களவையில் 3 வேளாண் மசோதக்கள் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து, அவை துணை தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு 8 எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து ஹரிவன்ஷ் அளித்த புகாரின் பேரில், அமளியில் ஈடுபட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். அதன்படி, டெரிக் ஓ பிரையன் கே.கே.ராஜேஷ், ராஜீவ் சத்வவ், ரிபுன் போரா, டோலா சென், சையது நாசர் உசேன், சஞ்சய் சிங், எளமறம் கரீம் ஆகியோர் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து விடிய விடிய எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து 8 எம்.பிக்களும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களை மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் இன்று காலை சந்தித்தார். அவர்களுக்காக டீ கொண்டு வந்தார். ஆனால் அவர் அளித்த டீயை ஏற்க எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.இந்நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் தன்னை அவமதித்ததைக் கண்டித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

போராட்டம் நடத்திய எம்.பி.க்களுக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் போது தேச பக்தி பாடல்களை பாடியதுடன் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
தங்கள் போராட்டம் காலவரையறையின்றி நடைபெறும் என திரிணமூல் எம்.பி.டெரக் ஓ பிரையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 8 எம்.பி.க்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கூட்டத் தொடரை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கும் விதமாக தர்ணா போராட்டத்தை 8 எம்.பி.க்களும் வாபஸ் பெற்றனர்.

Tags : protest ,MPs , Suspend, MPs, Tarna, Struggle, Withdraw
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...