×

யானை வழிதடத்தில் சாலை விரிவாக்கம்: நெடுஞ்சாலை துறையினரின் திட்டத்திற்கு எதிர்ப்பு

குன்னூர்: சோலைக் காடுகள் அதிகம் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீப காலமாக, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் அழிக்கப்பட்டதால், சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கிறது. இதேபோன்று மேட்டுபாளையம்- குன்னூர் வனப்பகுதிகள் அருகே யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கும் வரும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஈச்சமரம் பகுதியில் தண்ணீர் தேவைக்காக யானைகள் சாலையை கடந்து செல்வது வழக்கம்.

அந்த பகுதியில் யானைகள் சாலையை கடக்கும் பகுதி என்று வனத்துறையினரின் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டது‌. ஆனால் நெடுஞ்சாலை துறையினர் பதாகைகளை அகற்றி அவற்றை பொருட்படுத்தாமல் சாலை விரிவாக்க பணி என்று கூறி அதன் வழித்தடதில் ஜேசிபி உதவியுடன் அழித்து வந்தனர்.

இது குறித்து தினகரனில் கடந்த மாதம் செய்தி வெளியானது. இதனால் உடனடியாக நெடுஞ்சாலை துறை அங்கு பணிகளை நிறுத்தியது. வனத்துறை ஆய்வுகள் மேற்கொண்டு அங்கு யானை வழித்தடம் என்பதை உறுதி செய்தது.
பின்னர் அங்கு யானைகள் சென்று வர வழி விட வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் படி யானைகள் கடந்து செல்ல 6 மீட்டர் இடம் விடப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். தற்போது சாலையின் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 6 மீட்டர் இடைவெளியில் காட்டு யானை எளிதில் சென்று வர முடியாது. யானைகள் வந்து செல்வதில் சிக்கல் எழும். என இந்த திட்டத்தையே கைவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது: சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் யானை வழித்தடத்தை அழிப்பதால் அவை குடியிருப்புகளுக்குள் வரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேவைக்காக யானைகள் சாலையை கடக்கும் இடத்தில் கான்கிரீட் கட்டிடங்கள் அமைப்பது வேதனையளிக்கிறது.

இவ்வழியே தந்தங்களுடன் கூடிய ஒரு யானை அடிக்கடி சென்று வந்துகொண்டிருந்தது. தற்போது சாலை விரிவாக்க பணி காரணமாக அந்த யானை இப்பாதையில் நடமாடுவதை காணமுடியவில்லை. வனப்பகுதி மத்தியில் கான்கிரீட் கட்டிடங்கள் அமைக்கும் நெடுஞ்சாலை துறையினர் இந்த திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Road ,Elephant Route: Opposition ,Highways Department , Road widening, elephant
× RELATED குளித்தலை, மணப்பாறை சாலையில்...