×

ஈரோடு மாவட்டத்தில் 25 சாய, தோல் தொழிற்சாலைகள் மூடல்: கலெக்டர் தகவல்

ஈரோடு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மாவட்டத்தில் 25 சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ரூ.1.35 கோடி இழப்பீடு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் காவிரி ஆற்றில் பிச்சைகாரன்பள்ளம் ஓடை, வைராபாளையம் குப்பை கிடங்கு மற்றும் பவானி காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினருடன் கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று நீர் மாசுபடுவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அதனடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும், நீரின் தரத்தை உயர்த்தும் விதமாகவும் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் ஈரோடு மற்றும் நாமக்கல் கலெக்டர்கள், பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது காவிரி மாசுபடுவதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம், பறக்கும் படை, வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களை கொண்ட துணைக்குழுவும் அமைக்கப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி 25 சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.35 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. வைராபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் உள்ள மாநகராட்சி குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 7 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல், காடையாம்பட்டி சாய சலவை தொழிற்சாலையில், பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு முறையில் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் சுத்திகரிக்கும் முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

ஆய்வின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செந்தில் விநாயகம், உதயகுமார், செல்வகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Closure ,factories ,Erode district , National Green Tribunal, tanneries
× RELATED மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு