×

மாற்றுத்திறனாளி, முதியவர்களுக்கு ‘இறைவனின் சமையலறை’ தொடக்கம்: திருவண்ணாமலை கலெக்டர் புதிய முயற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கும் ‘இறைவனின் சமையலறை’யை கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுக்களுடன் வரும், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பெரும்பாலானோர் மதிய உணவுக்கு வழியின்றி பசியுடன் ஊர் திரும்புகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று நடக்கும் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளபோதும் கோரிக்கை மனுக்களுடன் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே அவர்களுடைய பசியை தீர்க்க, ஒவ்வொரு திங்கள் கிழமையும், மதிய உணவு வழங்குவதற்காக, ‘இறைவனின் சமையலறை’ எனும் புதிய முயற்சியை கலெக்டர் கந்தசாமி தொடங்கியிருக்கிறார். அதையொட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் ஒரு பகுதியில், சமையலறை தொடங்கப்பட்டுள்ளது.அங்கு, சுகாதார முறைப்படி மதிய உணவு தயாரிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மதிய உணவை நேற்று கலெக்டர் கந்தசாமி வழங்கினார். முதல் நாளான நேற்று சாம்பார் சாதம், வெஜிடெபிள் சாதம், தயிர் சாதம் மற்றும் கேசரி ஆகியவை வழங்கப்பட்டது.

மேலும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் உதவிக்கு வந்தவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. அளவு கட்டுப்பாடு இல்லாமல், தேவையான அளவுக்கு உணவு வழங்கப்பட்டது. சூடாகவும், சுவையாகவும் மதிய உணவு வழங்கப்பட்டதால், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கலெக்டரின் இந்த முயற்சியை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Tags : Launch ,Lord's Kitchen ,Thiruvannamalai Collector , Thiruvannamalai, Collector, Lords Kitchen
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...