×

தமிழகத்தில் வீட்டு வாசலிலேயே மின்கட்டணம் வசூலிக்கும் முறை!: விரைவில் அறிமுகப்படுத்த மின்சார வாரியம் திட்டம்..!!

சென்னை: வீட்டு வாசலுக்கே வந்து மின்சார நுகர்வு கட்டணத்தை வசூலிக்கும் புதிய வசதியை மின்வாரியம் விரைவில் அறிமுகப்படுத்துகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள வீடுகளில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் வாரிய ஊழியர்கள் நேரில் வந்து மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர். இதையடுத்து மின்கட்டண மையங்கள், இ - சேவை மையங்கள் தபால் நிலையங்கள், வாரிய இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் மக்கள் மின்கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாயின்ட் ஆப் சேல் என்ற டிஜிட்டல் கருவியின் வாயிலாக கிரெடிட் மட்டும் டெபிட் கார்டுகள் மூலம் நுகர்வோர் வீட்டு வாசலிலேயே கட்டணம் செலுத்தும் முறை விரைவில் தமிழகத்தில் அறிமுகமாகவுள்ளது. இதனால் மீட்டரில் கணக்கெடுத்த நாள் அன்றே, வீட்டு வாசலிலேயே மக்கள் நுகர்வு கட்டணத்தை செலுத்த முடியும்.

மேலும், முதியவர்கள், மாற்று திறனாளிகள், நோயாளிகள் மின்கட்டணத்தை எளிதாக செலுத்தும் வகையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மின் ஊழியர்களிடம் பாயின்ட் ஆப் சேல் டிஜிட்டல் பணம் செலுத்தும் கருவி வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் மின் பயன்பாடு கணக்கெடுத்து கட்டணத்தை நுகர்வோரிடம் தெரிவிக்கும் போது பணம் செலுத்த விரும்புவோர் உடனே டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். இது தவிர கியூ ஆர் கோட் என்ற ரகசிய குறியீட்டை மொபைல் போனில் ஸ்கேன் செய்து மின் கட்டணம் செலுத்தும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்த மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Electricity Board , Tamil Nadu, Electricity Board, Electricity Board Scheme
× RELATED பொதுமக்களின் வீடு, நிலம் அருகே உள்ள...