×

பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்: பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த முடிவு..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு  எதிராக அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அவர் பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹிரிக் இ இன்ஷா கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமரானார்.  இம்ரான் கான் தலைமையிலான நிர்வாகம் திறமையில்லாத, மோசமான நிர்வாகம் என்றும், அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என்று கூறிவரும் எதிர்க்கட்சிகள், அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்தை நடத்த முக்கிய எதிர்க்கட்சிகள் முன்வந்துள்ளனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில், அனைத்து கட்சி மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமேத் உலமா இல் இஸ்லாம்  உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 26 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய கூட்டு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இம்ரான்கான் அரசுக்கு எதிராக அடுத்த மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி வரை 3 கட்டங்களாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.


Tags : United Opposition ,Pakistani ,protest , Pakistan Prime Minister Imran, Opposition, Nationwide Struggle
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி