×

வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் தேடிவரும் 3,501 நகரும் நியாயவிலை கடை: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 3,501 நகரும் நியாய விலை கடை திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களை சேர்ந்த 5,37,315 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது குடியிருப்புகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட ₹9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும்  நியாயவிலை கடைகளின் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலை கடைகளின் வாகனங்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த நடமாடும் நியாயவிலை கடைகள் மூலம், மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியான அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வார்.

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக நேற்று  6 குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி பைகளை முதல்வர் வழங்கினார்.செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்ட சத்துக்களை கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த அரிசி.  இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உட்பட அனைவருக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ரத்த சோகையைப் போக்கிடவும் உதவுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்  கடைகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14,500 மெட்ரிக் டன்னும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் சத்துணவுத்  திட்டத்தின் மூலம் 500 மெட்ரிக் டன்னும் வரும் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 3 ஆண்டு காலங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : homes , 3,501 moving fair price shop looking for ration items for homes: Chief started
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை