×

விவசாய மசோதாக்களை எதிர்த்து கோட்டையை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி: போலீசாருடன் தள்ளுமுள்ளு

சென்னை: விவசாய மசோதாக்களை எதிர்த்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டை நோக்கி முற்றுகையிட சென்றனர்.  அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ்காரர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் சென்னை பாரிமுனையில் நேற்று  போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர்  சண்முகம் தலைமை வகித்தார். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செம்பா முன்னிலை வகித்தார். இதில் பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல இருந்தனர்.

அப்போது அவர்களை போலீசார் தடுத்து  நிறுத்தினர். அதனால் விவசாய சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாரிமுனை சந்திப்பில் நான்கு புறத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்கூட்டியே அறிவித்த போராட்டம்  என்பதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.  எனினும்  சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிலர் படுத்துக்கொண்டு போராடினர்.  அவர்களை அப்புறப்படுத்த போலீசார் தொடர்ந்து முயற்சி செய்தனர். பின்னர்  அனைவரும் கைது செய்யப்பட்டு மாநகர காவல் பேருந்தில் ஏற்றி  மண்ணடி, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம்  செய்தியாளர்களிடம் பேசியது:  விவசாய நலன்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேற காரணமாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை குறித்தோ, அரசு கொள்முதல் குறித்தோ எந்த அறிவிப்பும் இந்த மசோதாக்களில் இல்லை. அரசு கொள்முதல் செய்யும் போதே குறைந்தபட்ச ஆதார விலை கட்டுப்படியாகவில்லை. இச்சட்டம் விவசாயத்தை  கார்ப்பரேட் கபளீகரம் செய்ய வழி வகுக்கும்.
அரசு கொள்முதல் செய்யாவிட்டால் ரேஷன் கடைகள் இயங்காது. ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்காது. பிரதமர் நரேந்திர மோடி சுவாமிநாதன் கமிட்டி கோரிக்கையை ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. இந்த மசோதாவை திரும்பபெரும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : fort , Farmers try to blockade the fort against agricultural bills: push with the police
× RELATED விவசாயிகள் ஏமாற்றம் பிரம்மரிஷி...